தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் நாகேஷ். இவர் 1933ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கன்னட மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். இளமைப் பருவம் வரை தாராபுரத்தில் வாழ்ந்து வந்த நாகேஷ், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடனும், ’சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன்’ என்ற மன உறுதியுடனும் சென்னை நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் கவிஞர் வாலி, இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோருடன் ஒரே அறையில் நடிகர் நாகேஷ் தங்கியிருந்தார். பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு அவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. ரயில்வேயில் பணியாற்றியபோது அங்கு நடைபெற்ற நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகர் நாகேஷ். அப்போது, அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எம்ஜிஆர், நடிகர் நாகேஷின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.
இதனையடுத்து படவாய்ப்புகள் தேடத் தொடங்கிய நாகேஷ், 1958ஆம் ஆண்டு ’மானமுள்ள மறுதாரம்’ என்ற திரைப்படத்தின் வாயிலாக குணச்சித்தரக் கதாபாத்திரத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், எம்ஜிஆருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஏராளமான எம்ஜிஆர் படங்களில் அவர் நடிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் காமெடியனாக நடித்துப் புகழ்பெற்றாலும், இயக்குநர் ஸ்ரீதர், பாலச்சந்தர் ஆகிய இயக்குநர்களின் படங்களில் தான் நடிகர் நாகேஷ் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்தார்.
கே.பாலசந்தரின் படங்களில் நகைச்சுவையையும் தாண்டி குணச்சித்திர வேடங்களில் நாகேஷ் முத்திரை பதித்தார். சர்வர் சுந்தரம், ஜெயகாந்தனின் ’யாருக்காக அழுதான்’, தாமரை நெஞ்சம், மேஜர் சந்திரகாந்த் போன்ற படங்களில் நாகேஷின் குணசித்திரக் கதாபாத்திரங்கள் பிரமிக்கத்தக்கவை. எண்ணிலடங்கா வேடங்களில் நாகேஷ் நடித்துள்ள போதிலும் இன்றும் வசந்த மாளிகை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நாகேஷின் கதாபாத்திரங்கள் வியந்து போற்றப்படுகின்றன.
நகைச்சுவை நடிகர்களில் சந்திரபாபுவிற்குப் பிறகு நடனத்தில் சாதனை படைத்த நாகேஷின் கடினமான நடன அசைவுகளை மற்ற நடிகைகளால் நடிக்க முடியாததால், அவரது நடனக் காட்சிகள் பெரும்பாலும் தனியாகவே படம் பிடிக்கப்பட்டது.
அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரது கலைப் பயணத்தில் சிறு தொய்வு ஏற்பட்ட நிலையில், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் நாகேஷின் இரண்டாவது இன்னிங்ஸ் நடிகர் கமல்ஹாசனுடன் மீண்டும் தொடங்கியது. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், நம்மவர், தசாவதாரம் என அவர்களது பயணம் வெற்றிகரமானதாக அமைந்தது. நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நாகேஷ் தட்டிச் சென்றார்.
எம்ஜிஆர், சிவாஜி இவர்களுக்குப் பின் வந்த நடிகர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், அடுத்த தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி, இன்றைய தலைமுறை நடிகரான தனுஷ் என வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த நடிகர்களோடு சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்த பெருமை நாகேஷுக்கு உள்ளது.
கிறிஸ்தவப் பெண்ணை மணந்ததால் குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட நாகேஷுக்கு மூன்று மகன்கள். நீண்ட நாட்களாகவே சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு நாகேஷ் கடந்த 2009ஆம் ஆண்டு தனது 75ஆவது வயதில் காலமானார். தமிழ்த் திரையுலகில், ’நகைச்சுவை நடிகர்’ என்றதும் முதலில் மனதில் தோன்றி மக்களை இன்றளவும் மகிழ்விக்கும் தனித்துவம் வாய்ந்த கலைஞர் நாகேஷ் பிறந்து 87 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.