அவ்னி மூவிஸ் சார்பில், இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், சென்னை பிரசாத் லேபில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர்கள் கலந்துக்கொண்டனர்.
இதில் இயக்குநர் ராணா பேசுகையில், ஆதி, சுந்தர்.சி., குஷ்பூ மூவரும் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது. கே.எஸ்.ரவிகுமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியையை அருகில் வைத்து தேர்வு எழுதுவது போல இருந்தது. முதல் படம் இயக்குகிறாய், கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று என்னை கே.எஸ்.ரவிகுமார் ஊக்குவித்தார் என்றார்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் பேசுகையில், சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர்.
இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும் என்றார்.
நடிகர் ரவிமரியா பேசுகையில், இப்படம் சுந்தர்.சி, ஆதி கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படம் வெற்றிபெறவில்லையென்றால், நான் சினிமாவிலிருந்தே விலகி விடுவேன் என்றேன்.
நான் கூறியதுபோல் படம் வெற்றிப் பெற்றுள்ளது. திரையரங்கில் படவா கோபி, மற்ற நடிகர்களும் காட்சியில் தோன்றும்போது அதிகளவில் ரசிகர்களின் கைதட்டல்கள் உருவாகின. இயக்குநர் ராணா ஒவ்வொருவரையும் நன்றாக புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ப கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் போல மாபெரும் இயக்குநராக ராணா வருவதற்கு வாழ்த்துகள் என்றார்.
இவரைத் தொடர்ந்து பிக் பாஸ் புகழ் ஜூலி பேசுகையில், இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணாவிடம் பொறுமையைக் கற்றுக் கொண்டேன். மொத்த படக்குழுவினரும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல நடத்தினார்கள் என்றார்.
‘படவா’ கோபி பேசுகையில்,படத்தின் வெற்றியைப் பற்றி பேசுவதா? அல்லது என்னுடைய வெற்றியைப் பற்றி பேசுவதா? என்பதில் குழப்பமாக உள்ளது. ‘3’ படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பார்த்து ரசித்து ‘நான் சிரித்தால்’ படத்திற்கு ஆதிக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார் இயக்குநர் ராணா.
சிறு சிறு வேடங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று இருந்த எனக்கு இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றார்.
இதையும் வாசிங்க: லவ் குருவில் ‘96’ ஒலிச்சித்திரத்துக்கு தடை - பின்னணியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம்!