தமிழ் சினிமாவின் புதிய அலை இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித்தின் 'அட்டக்கத்தி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா சில காலம் ஒதுக்கி வைத்திருந்த கானா பாடல்கள் சந்தோஷ் நாராயணன் வருகைக்கு பின் பெரும் கவனம் பெற்றது.
'அட்டக்கத்தி' படத்தில் இடம்பெற்ற 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா' ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. அடுத்தது.. கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான 'பீட்சா'வுக்கு சந்தோஷ்தான் இசை. இந்தத் த்ரில்லர் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அவரது இசைப் பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். அதேபோல் நலன் குமாரசாமியின் முதல் திரைப்படமான 'சூது கவ்வும்' இவரது இசையமைப்பில் உருவானதுதான்.
அதில் 'சடன் டிலைட்' எனும் தீம் மியூசிக் இளைஞர்கள் பலரின் ரிங்டோன் ஆனது. கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமான 'ஜிகர்தண்டா', சந்தோஷ் நாராயணனுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. ’இத்தன நாளா எங்கயா இருந்த’னு கோடம்பாக்கம் சந்தோஷ் நாராயணனை அள்ளி அணைக்கத் தொடங்கியது.
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சில படங்களுக்குள்ளாகவே பெருவாரியான இளைஞர்களை தன் இசையால் ஈர்த்தார் சந்தோஷ் நாராயணன். மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் 'ஜிகர்தண்டா' படத்தில் இடம்பெற்ற 'பாண்டி நாட்டு கொடியின் மேல' பாடல் நிச்சயமாக இடம்பெறும்.
பின்னர் ராஜுமுருகன், மாரி செல்வராஜ் என இவர் தொடர்ந்து பணியாற்றி வரும் இயக்குநர்கள் பட்டியல் நீள்கிறது. 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'வடசென்னை', 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' என தமிழ் சமூகத்தில் பெரும் உரையாடலை நிகழ்த்திய இந்தத் திரைப்படங்களுக்கு சந்தோஷ்தான் இசை.
மண் சார்ந்த இசையைக் கொடுக்க நாட்டுப்புறக் கலைஞர்களை சந்தோஷ் அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார். இது அக்கலைஞர்களை வளர்த்தெடுக்கும் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சுயாதீன இசைக் கலைஞர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். ரஜினி, விஜய், தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சந்திரங்கள் பலருடன் பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில், சந்தோஷ் நாராயணன் என்ற பெயர் தவிர்க்க முடியாததும், மறக்க முடியாததுமாக இருக்கும். ”பேன்டு சத்தம், டேப்பு சத்தம், கானா பாட்டு காத சுத்தும்.. ஆக மொத்தம் வாழுவோமே சந்தோஷ் இசையோடுதான்” என சநாவின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்துகள் சந்தோஷ் நாராயணன்.