தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென்று தனி சகாப்தத்தை உருவாக்கி இருப்பவர் இசைஞானி இளையராஜா. கிராமிய இசை, மேற்கத்திய கிளாசிக் இசை, கர்நாடக இசை என மக்களின் ரசனைக்கேற்றாவாறு இசை விருந்தை படைத்து வருகிறார் இசைஞானி. தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளை கடந்து என்றும் "ராஜாதி ராஜா"வாக திகழும் இளையராஜாவை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நவீன காலத்திற்கேற்றார்போல் ரசிகர்களின் ரசனையும் மாறும் நிலையில், இசையும் புதிய பரிமாணங்களை படைத்து, இணையதள உலகில் புரட்சி செய்து வருகிறது என்றே சொல்லலாம்.
அந்தவகையில், இளையராஜா தனது பிறந்தநாளன்று வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், வெறும் இசை மட்டும் வந்தால் போதுமா? நான் வர வேண்டாமா உங்கள் வீட்டிற்கு. இசை ஓடிடி மூலமாக உங்கள் இல்லம் தேடி நான் வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனையறிந்த ரசிகர்கள் அவரது இசையை கேட்டு மகிழ ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த இசை ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் வீடியோ குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2000ஆம் ஆண்டில் கமல் நடிப்பில் வெளிவந்த ஹேராம் படத்திற்கு, ஹங்கேரியில் அங்குள்ள இசைக்கலைஞர்களை வைத்து இளையராஜா நடத்திய இசைப்பதிவு முதல் வீடியோவாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கறுப்பு உடையில் 'ஆடு ஜீவிதம்' பிரித்திவிராஜ் உடற்பயிற்சி