தமிழ் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்பவர் ஜி. வி. பிரகாஷ் குமார். இவர் ஜூன் 13ஆம் தேதி, 1987ஆம் ஆண்டு பிறந்தார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சிறுவயதிலிருந்தே படிப்பை விட இசையில் ஆர்வம் கொண்டு திகழ்ந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம், சிறுவயதிலேயே பாடகனாக அவதாரமெடுத்தார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் உதவியாளராக அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் பணியாற்றினார்.
முதன்முதலில் 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ”வெயில்” திரைப்படத்தின் மூலமாக, இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சாமானிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இதனைத் தொடர்ந்து பொல்லாதவன், காளை, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைத்தார். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன் ஆகிய திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை போன்றவை திரையுலகினரை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தன.
பிரபல இசையமைப்பாளராக வலம் வரத் தொடங்கிய பின்னர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்திலும் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக விஜய் நடிப்பில், 2013ஆம் ஆண்டு வெளியான ”தலைவா” திரைப்படத்தின் ஒரு பாடலில், விஜய்யுடன் இணைந்து நடனமாடினார்.
பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் 2015ஆம் ஆண்டு வெளியான ”டார்லிங்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
இவர் தனது பள்ளி தோழியான பாடகி சைந்தவியை காதலித்து, 2013ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது குழந்தைக்கு அன்வி என பெயர் சூட்டியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு தைரியமாக குரல் கொடுத்து பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் தரும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
புகழ்பெற்ற இசையமைப்பாளர், சிறந்த பாடகர், நல்ல நடிகர் எனும் புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் என்பதைத் தாண்டி, தனது வாழ்வில் தொடர்ச்சியாக அவமானங்களையும், தோல்விகளையும் கண்டவர் ஜி.வி.பிரகாஷ்.
முதன் முறையாக கதாநாயகனாக நடித்தபோது, தனது உயரத்துக்காகவும், குரலுக்காகவும் கடும் கேலிக்கு உள்ளானார். ஆனால், தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தற்போது உருவாக்கியுள்ளார். வாழ்வில் முன்னேற துடிக்கும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும், ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று (ஜூன். 13) தனது 34ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, #HBDGVPRAKASH என்ற ஹேஷ்டேக்கின் மூலம் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : உருவ கேலி செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சனுஷா