தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் இன்று (செப்டம்பர் 2) தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர் என தங்களது வாழ்த்துகளை வெவ்வேறு வகையில் தெரிவித்தனர்.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர், பவன் கல்யாணுக்கு 25 அடி உயர பேனர் வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, பேனர் வைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின்சார கம்பி, ரசிகர்கள் மீது உரசியது.
இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் மூவர் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், திரை பிரபலங்கள் பலர் இவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், நேற்றிரவு நடந்த பவன் கல்யாண் ரசிகர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களின் அன்பு சமன் செய்யமுடியாதது. ஆனால், ரசிகர்களே... உங்கள் வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்பதால் தயவுசெய்து மிகவும் கவனமாக இருங்கள் என அக்கறையுடன் அறிவுறுத்தியுள்ளார்.
உயிரிழந்த சகோதரர்களுக்கு எனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவாக குணம் பெறவும், அவர்களின் குடும்பங்கள் வலிமை பெறவும் பிரார்த்தனை செய்கிறேன் என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:ஒட்டுமொத்த திரைப் பிரபலங்களையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் - கிச்சா சுதீப்