கானா உலகின் கலக்கல நாயகனாக இருந்து, குத்தாட்டம் போட வைத்த இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல் தேவா', இன்று தனது 61ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
90'ஸ் கால கட்டத்தில் இசைஞானி ஒருபுறம் மெல்லிசையால் கட்டிப்போட்டுக்கொண்டிருக்க, இசை மழையில் நனைய வைக்க ஒரு இளைஞர் உதயமானார். 1989ல் ராமராஜன் - சீதா நடிப்பில் வெளியான 'மனசுக்கேத்த மகராசா' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய் எனப் பலருடனும் பணியாற்றியிருக்கிறார். இவர் இசையமைத்த ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெற்ற, தீம் மியூசிக் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
கொத்தால்சாவடி லேடி, வெள்ளேரிக்கா பிஞ்சு, சலோமியா, கந்தன் இருக்கும் இடம், பிள்ளையார்பட்டி ஹீரோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கானா பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வகையில் தேவாவின் கைவண்ணத்தில் அமைந்ததே அதன் சிறப்பு.
90'ஸ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த பாடல்களில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு. படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், தேவாவின் பாடல்களுக்காகவே ஓடிய படங்களும் உள்ளன.
பாட்ஷா, அருணாச்சலம், காதல் கோட்டை, விஷ்ணு, சொக்கத்தங்கம், சிவகாசி, வியாபாரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் இவர் இசையமைத்த பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் இன்றளவும் ஒலிக்கிறது. இசையமைப்பது மட்டுமின்றி கனத்த குரலுக்கு சொந்தக்காரராகவும் பலப் பாடல்களை தந்து இசை விருந்து படைத்திருக்கிறார்.
இப்படி பல்வேறுத் திரைப்படங்களிலும் தனது இசையை கானா மட்டுமின்றி, மனதை மெய்சிலிர்க்கச் செய்யும் எவர் கிரீன் பாடல்களையும் இயற்றி, இன்று தமிழ் சினிமாவின் மறுக்கமுடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தேவாவுக்கு இன்று 61ஆவது பிறந்த நாள்...!
இசையோடு வந்தோம்...இசையோடு வாழ்வோம்...இசையோடு போவோம்...இசையாவோம்… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இசையாகவே வாழ்ந்து, விருந்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..!
'ஆடை' இயக்குநருக்கு மிமிக்ரி செய்து வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய்!