த டூ போப்ஸ்:
வாடிகன் தேவாலயத்தின் நிகழ்கால போப் பெனடிக்ட் (அந்தோணி ஹாப்கின்ஸ்) மற்றும் வருங்கால போப் ஃப்ரான்சிஸ் (ஜோனத்தன் ப்ரைஸ்) இருவரும் தங்கள் கருத்துவேறுபாடுகளைக் கடந்து ஆலயத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து பயணிக்க முற்படும் கதையைக் கொண்டுள்ள இந்தத் திரைப்படம், மூன்று ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகவும், வரலாற்றுத் திரிபு என ஒருபுறம் விமர்சிக்கப்பட்டும் வரும் நெட்ப்ளிக்ஸின் இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுகள் பந்தயத்தில் சற்று பின்தங்கியே உள்ளது
த ஐரிஷ்மேன்:
ராபர்ட் டெநிரோ, அல்பசினோ என பெரும் நடிகர்களைக் கொண்டு வெளிவந்திருக்கும் மார்ட்டின் ஸ்கார்சிஸின் இத்திரைப்படம் ஜிம்மி ஹோஃபா எனும் அமெரிக்க தொழிற்சங்கத் தலைவர் தலைமறைவான கதையை, ஃப்ரேங்க் ஷீரன் எனும் முன்னாள் அடியாள் வாயிலாக விவரிக்கும் இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
மொத்தம் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய கதையான இந்தத் திரைப்படத்திற்கான பணிகள் 2010ஆம் ஆண்டு முதலே தொடங்கப்பட்டுவிட்டது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட நெட்ஃப்ளிக்ஸின் திரைப்படங்களிலேயே பெரும்பான்மை ரசிகர்களின் சாய்ஸாகவும் சிறந்த திரைப்படம், சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை, சிறந்த VFX உள்ளிட்ட பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 1917ஐ சமன்செய்துமுள்ள இத்திரைப்படம் ஐந்திற்கும் மேற்பட்ட பிரிவுகளில் வெல்லும் என அடித்து சொல்கிறார்கள் ரசிகர்கள்.
ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட்:
60களின் மாற்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஹாலிவுட் சினிமா உலகில், புகழை இழந்து சினிமாவில் மீண்டுவர போராடிக்கொண்டிருக்கும் நடிகர், அவரது ஸ்டண்ட் டபுள் என இவர்களைச் சுற்றி விரியும் கதையான இத்திரைப்படம், மொத்தம் 10 திரைப்படங்களை மட்டுமே தன் வாழ்நாளில் இயக்குவேன் என முன்னதாக அறிவித்த டேரண்டினோவின் ஒன்பதாவது திரைப்படமாகும்.
வழக்கம்போல் ஹாலிவுட் போற்றும் கனவுநாயகன் லியனார்டோ டிகாப்ரியோ இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள போதும், கோல்டன் க்ளோப், பாஃப்டா எனத் தொடர்ந்து ப்ராட் பிட் லியோவைப் பின்னுக்குத் தள்ளி விருதுகளை அள்ளியுள்ளதால், ஆஸ்கர் விருதுகளிலும் ப்ராட் பிட் மீதான எதிர்ப்பார்ப்பே அதிகம் உள்ளது. 1917, த ஐரிஷ்மேன் படங்களைப் போலவே இத்திரைப்படமும் மொத்தம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாராஸைட்:
படத்தின் தலைப்பு தொடங்கி, இந்த ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஆஸ்கர் பந்தயத்தில் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்தத் தென்கொரியத் திரைப்படம். ஒருவரையொருவர் சார்ந்துள்ள பெரும் செல்வந்த பார்க் குடும்பம் மற்றும் ஏழ்மையின் பிடியிலுள்ள கிம் க்ளேன் குடும்பங்களுக்கிடையே நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் படமாய் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் இயக்குநர் போங் ஜூன் ஹோ பல்வேறு விருதுகளைக் குவித்தும், எண்ணற்ற பாராட்டுக்களையும் குவித்துள்ள இந்தத் திரைப்படம், 1917 திரைப்படத்திற்கு கடும் போட்டியாக சிறந்த இயக்குநர், சிறந்தத் திரைப்படத்திற்கான வெளிநாட்டுப் பிரிவுகளில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டாய் ஸ்டோரி 4:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு அனிமேஷன் ரசிகர்களும் பார்த்துக் குதூகலிக்கும் விதத்தில் 2019 கோடையைக் குறிவைத்து வெளியான இந்தத் திரைப்படம் ஆஸ்கர் பந்தயத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஃப்ரோசன் 2 ஐ பின்னுக்குத் தள்ளி சிறந்த அனிமேஷன் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டதே டாய் ஸ்டோரி தொடரின் ரசிகர்களான 90ஸ் கிட்ஸை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள அனிமேஷன் திரைப்படங்களிலேயே உயர் தொழில்நுட்பவசதிகளைக் கொண்டும் , காற்றில் பறக்கும் தூசி வரை அவ்வளவு நுட்பமாய் கையாளப்பட்டும் வெளிவந்துள்ளதாக சிலிர்க்கிறார்கள் பிச்ஸர் ரசிகர்கள். டாய் ஸ்டோரி 1 முதல், இத்தொடரின் முக்கியக் கதாப்பாத்திரமான வூடிக்கு டப் செய்து வந்த டாம் ஹேங்க்ஸ், புதிதாய் இணைந்துள்ள கியானு ரீவ்ஸ் என நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இத்திரைப்படமும் ஆஸ்கர் பந்தயத்தில் தனி ரசிகர் பட்டாளத்தின் எதிர்ப்பார்ப்புகளை சுமந்து பயணிக்கிறது.
ஜோ ஜோ ரேபிட்:
இரண்டாம் உலகப்போரின் மத்தியில் தனிமையின் பிடியில் வாழும் ஹிட்லரை தன் கற்பனை நண்பனாகக் கொண்டு வளரும் 10 வயது சிறுவன் ஜோஜோ, தன் அன்னையால் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் யூத சிறுமி மற்றும் நாட்டில் நிகழும் போர் பாதிப்புகளைத் தொடர்ந்து மெல்ல மெல்ல கண்மூடித்தனமான தேசப்பற்று மற்றும் ஹிட்லரின் பிம்பத்தைப் பற்றியிருப்பதைவிட்டு வெளிவருவது என ஆழமான கதையை நகைச்சுவைத் ததும்பவும், உணர்ச்சிகரமாகவும் கடத்தியிருக்கிறார்கள்.
ஆஸ்கர் உலக வரலாற்றில் இரண்டு வெவ்வேறு திரைப்படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடிகை எனும் பெருமையை ஸ்கார்லெட் ஜோஹன்சன் இத்திரைப்படம் மற்றும் மேரேஜ் ஸ்டோரிக்காக பரிந்துரைக்கப்பட்டு பெற்றிருக்கிறார். தவிர, சிறந்த திரைப்படம், சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போட்டியிட்டாலும், சிறந்த தழுவப்பட்ட திரைக்கதைக்காக படத்தின் இயக்குநர் டைக்கா வைட்டிட்டி விருது பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தவிர ஜூடி திரைப்படத்திற்காக கோல்டன் க்ளோப், பாஃப்டா விருதுகளைத் தொடர்ந்து ரெனி ஸெல்வெஜெர் சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த ஒளிப்பதிவிற்காக த லைட் ஹவுஸ், VFX ற்காக த லயன் கிங் திரைபப்டங்கள் எதிர்ப்ப்பார்புப் பட்டியலில் உள்ளன. த லிட்டில் வுமன் சிறந்தத் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இசை உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்காக என பரிந்துரைப் பட்டியலில் மொத்தம் 53 திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர். எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை அள்ளும் என்பதை நாளை காலைவரை பொறுத்திருந்து காணலாம்.
இதையும் படிங்க: உச்சத்தில் ஆஸ்கர் ஃபீவர்: விருதுகளை அள்ளப்போகும் திரைப்படங்கள் எவை?