1982ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான திரைப்படம், மூன்றாம் பிறை. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த 25 படங்களை பட்டியலிட்டால் பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறைக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. அப்பாவி இளைஞனுக்கும், குழந்தையாக மாறியிருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பூக்கும் மெல்லிய உறவும், அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இளைஞனின் நிலையும்தான் இப்படம்.
மூன்றாம் பிறை படத்தின் அபார வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கியக் காரணம். இந்நிலையில், மூன்றாம் பிறை திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் தியாகராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்மவிபூஷன் இளையராஜாவுக்கு எங்கள் சத்ய ஜோதி நிறுவனத்தின் முதல் திரைப்படமான 'மூன்றாம் பிறை' வெளிவந்து இன்றோடு (பிப். 19) 40 ஆண்டுகள் ஆகிறது. இப்படம் மாபெரும் வெற்றி அடைந்து மிகுந்த பாராட்டுகளையும், பல முக்கிய விருதுகளையும் அள்ளி குவித்தது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசை. அந்தளவிற்கு இப்படத்தின் பாடல்கள் சாதனை படைத்தது.
40 ஆண்டுகளாகியும் இன்றும் இப்படத்திலுள்ள பாடல்களின் தாக்கம் குறையவில்லை என்றுதான் கூற வேண்டும். மேலும், எங்கள் நிறுவனத்தின் வெற்றி திரைப் பயணத்திற்கு தாங்கள் இட்ட இந்த பிள்ளையார் சுழியே காரணம். இதற்கு என் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.