பாலிவுட்டில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, அனில் தவான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'அந்தாதுன்'.
ஒரு முன்னாள் திரைப்பட நடிகரின் கொலை மற்றும் கண்பார்வையற்ற ஒருவர் தன்னை அறியாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் திரில் நிறைந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்ததோடு, சிறந்த படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில், இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அந்தப்படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடித்த கண்பார்வையற்ற இளைஞர் கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்தப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரசாந்த் தன்னை தயார்படுத்தி வருவதாகவும், பியானோ இசைக்கருவி பயிற்சி உள்ளிட்டவற்றைக் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக 'அந்தாதுன்' திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்க விருப்பம் காட்டி வந்ததாகவும், தற்போது பிரசாந்தை வைத்து மோகன் ராஜா இப்படத்தை இயக்குவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசாந்த் நடிப்பில் கடைசியாக தமிழில் 'ஜானி' திரைப்படமும், தெலுங்கில் ராம் சரண் தேஜாவின் 'வினய விதேய ராமா' படமும் வெளியாகியிருந்தது.