சென்னை: நடிகர் ரிஷி ரிச்சர்ட், குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை பல தரப்பிலிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்ற 'திரௌபதி' இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு வடபழனி பிரசாத் லேபில் நேற்று (செப். 23) நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி, ஜேஎஸ்கே கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
யோசித்துப் பேசாவிட்டால் திரைக் கதாபாத்திரமே
அப்போது இயக்குநர் மோகன் மேடையில் பேசுகையில், “நான் சமூக வலைதளங்களான யூ-ட்யூப் போன்றவற்றில் பார்ப்பதையே எனது படத்தில் வைப்பேன். மேடையில் நீங்கள் பேசியதைத்தான், என் படத்தில் வைத்துள்ளேன்.
அதனால் மீண்டும் மேடையில் பேசும் முன்னர் யோசித்துப் பேச வேண்டும், இல்லையென்றால் என்னுடைய படத்தில் கதாபாத்திரமாக வைத்துவிடுவேன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நடப்பதைத்தான் என்னுடைய அடுத்த படமாக எடுக்க உள்ளேன். படத்தைப் பற்றி தற்போது தெரிவிக்க முடியாது.
அழிக்க நினைக்கும் அனைவருக்குமே...
வி.கே. ராமசாமி நடித்த ருத்ர தாண்டவத்திற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இந்து மதத்திற்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக இந்தப் படம் இருக்கும். இந்து மதத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. அதனை எதிர்த்து கேட்க எனக்கும் உரிமை உள்ளது.
அதனை யார் சொன்னாலும் தவறுதான். அதிகாரத்தில் இருப்போருக்கு உள்ள உரிமைதான் எனக்கும் இருக்கிறது. அவர்களுக்கும் எனக்கும் எப்படி ஒரே சாலையோ அதுபோல்தான்” என்றார்.
தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட பெரியார், திமுக ஆகியோர் குறித்து கூறுகிறீர்களா எனச் செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது இந்து மதத்தை அழிக்க நினைக்கும் அனைவரையும்தான் கூறுகிறேன் என மோகன் ஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்த டொவினோ தாமஸ்