'மிஸ் சவுத் இந்தியா 2016' என்ற நிகழ்ச்சியை அஜித் ரவி என்பவர் நடத்தினார். அந்த ஆண்டு மீரா மிதுன், மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றார். மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தை வைத்து, இரண்டு பேஷன் டிசைனர்களிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளதாகவும், மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வாங்கித் தருவதாகவும் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து வந்த புகாரில் மீரா மிதுனிடம் இருந்து அழகி பட்டத்தை திரும்பப் பெற்றதாக, மிஸ் சவுத் இந்தியா 2016 நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜித் ரவி தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் மிஸ் சவுத் இந்தியா-2016 போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த நடிகை சனம் ஷெட்டிக்கு சென்றுள்ளதாக போட்டி நடத்தும் அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் இடம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் தேடிவந்துள்ளது மாடலிங் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல் தமிழில் 'அம்புலி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 'கதம் கதம்', 'சவாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவருகிறார்.
தற்போது சனம் ஷெட்டி இயக்குநர் மிஷ்கினிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.