மும்பையில் 2019ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா கிராண்ட் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பெண்கள் கலந்துகொண்டனர். பல தகுதிச் சுற்றுகள் நடைபெற்று முடிந்த நிலையில் கிராண்ட் இறுதிச்சுற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர், திரைப்பட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மும்பையில் சர்தார் வல்லபாய் படேல் உள்ளரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் தேர்வான அழகிகளிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுமன் ராவ் (22) என்ற கல்லூரி மாணவி மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.
சுமன் ராவுக்கு 2018ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்நாட்டு அழகி அனுக்ரீத்தி வாஸ் மகுடம் சூட்டினார். மேலும் இந்த வெற்றியின் மூலம் சுமன் ராவ் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
தெலங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா விஜ் என்ற அழகி மிஸ் இந்தியா ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைடெட், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி மிஸ் கிராண்ட் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.