சென்னை: தான் எப்போதோ பதிவிட்ட பதிவுகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக மேதகு பட இயக்குநர் கிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது மேதகு. இப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் கிட்டு என்பவர் இயக்கியுள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் கிட்டு மீது ஒரு தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பெண்கள் குறித்தும், பெரியார் குறித்தும் தவறாக கருத்து பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இயக்குநர் கிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிலர் நான் எப்போதோ பதிவிட்ட பதிவுகளை எடுத்து அதனை மாற்றி வெளியிட்டு வருகின்றனர். மேதகு திரைப்படம் மக்களிடம் சென்று சேரக்கூடாது என்பதற்காக பல குழுக்கள் இதுபோன்ற வேலையை செய்கின்றனர். என்றோ நான் பதிவிட்ட பதிவுகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதை இனிமேல் யாரும் தொடர வேண்டாம். மேதகு படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாத்த: 25 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி ரேஸில் ரஜினி