தமிழ் சினிமாவில் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள், அதிகமாக வெளியாகி வெற்றிப் பெறுகின்றன. ஜோதிகாவின் ’மகளிர் மட்டும்’, ’36 வயதினிலே’ மற்றும் நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’, ’அறம்’, ’மாயா’ உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன. நாயகர்களை மட்டுமே நம்பிய தமிழ் சினிமா, தற்போது கதாநாயகிகளை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய லாபத்தை ஈட்ட முடியும் என்று சமீபத்திய வெற்றிகள் உறுதிப்படுத்துகின்றன. ஜோதிகா, நயன்தாரா வரிசையில் அமலாபால், ஐஸ்வர்யா ராஜேஷ், சோனியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகள், ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்துவருகின்றனர்.
யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், 'கனா' எனும் முதல் ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நடித்தார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். பெண்கள் கிரிக்கெட் பற்றி பேசிய இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தைத் தொடர்ந்து, ’மெய்’ எனும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தை கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குநர்கள் சித்திக், ஜித்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்ஏ பாஸ்கரன் இயக்குகிறார். இந்த படத்தில் நிக்கி சுந்தரம் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சார்லி, கிஷோர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். அனில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ’மெய்’ படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகியுள்ளது.
’நாம செய்கிற குற்றங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் ஆனா அந்த குற்றங்களுக்கு தெரியும் அதற்கான முடிவு என்னென்னு’. ’ஒரு தப்பை தடுக்கணுமா தவிர்க்கணுமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
”உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயந்து ஒடுற ஆள் நான் கிடையாது உங்கள பத்தியும் தெரியும் உங்க விசாரணை பத்தியும் தெரியும்” என்று ஐஸ்வர்யா ராஜேஷ், போலீஸ் ஒருவரிடம் மிடுக்காக பேசும் வசனத்துடன் முடிவடைகிறது இந்த டீசர். மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை பற்றி பேசும் இந்த டீசர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.