நடிகை மீனா முதன்முறையாக நடித்துள்ள வெப் சீரிஸ் 'கரோலின் காமாக்ஷி'. ஜி5 நிறுவனம் தயாரித்துள்ள இந்த சீரிஸின் அறிமுக விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகை மீனா, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கரோலின் காமாக்ஷி டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் இறுதியில் நடிகை மீனா சில கெட்ட வார்த்தை வசனங்களை பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து, சினிமாவைப்போன்று வெப் சீரிஸுக்கு சென்சார் இல்லை என்பதற்காக மீனா இப்படிப்பட்ட வசனம் பேசலாமா என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளித்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், தான் சகலகலா வல்லவன் படத்தில் பேசிய ஒரு சிறிய வசனத்திற்காக தன்னிடம் சென்சார் போர்டு அலுவலர்கள் இரண்டு நாள்கள் விளக்கம் கேட்டதாக கூறினார். மேலும் இந்த வெப் சீரிஸில் மீனா உறுதியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும், அந்த வசனத்திற்கான தேவை இருந்த காரணத்தினாலும்தான் அது போன்று வசனம் பேசியதாக அவர் விளக்கமளித்தார்.
ஆங்கிலம், இந்தி வெப் சீரிஸ் போன்று இவர்கள் ஆபாச காட்சிகள் பக்கம் செல்லவில்லை என்று கூறிய அவர், கரோலின் காமாட்சி குழந்தைகளுக்கானது அல்ல என்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வெப் சீரிஸ் என்றார்.