'மாயநதி' படத்தில் ஆட்டோ ஒட்டுநர் கதாபாத்திரம் என்பதால் முறையாக ஆட்டோ ஒட்டி கற்றுக்கொண்டதாக படத்தின் நாயகன் அபிசரவணன் கூறியுள்ளார்.
டாக்டர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் அபிசரவணன், வெண்பா, 'ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'மாயநதி'. இப்படத்திற்கு பவதாரணி இசையமைத்துள்ளார். ஜனவரி 31 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படம் குறித்து அபிசரவணன் கூறுகையில், இந்த படத்திற்காக இயக்குநர் வைத்த ஆடிசனில் நான் ஓகே ஆனதுமே, ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும். அதனால் உங்களுடைய எடை கிட்டத்தட்ட 20 கிலோ குறைக்க வேண்டும் என்றார்.
![Abisaravanan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-mayanathi-abisravanan-script-7204954_29012020150214_2901f_1580290334_100.jpg)
அதற்கு நான் அவரிடம் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டேன். அந்த நேரத்தில் நான் அரிசி, பால் உள்ளிட்ட உணவுகளை எடுக்காமல் சிக்கன் மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைத்தேன். ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரம் என்பதால் மதுரையில் ஆட்டோ ஓட்டும் என் நண்பரிடம் சென்று முறையாக ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டேன். பின் ஆர்டி ஓ அலுவலகத்தில் முறைப்படி ஆட்டோ ஓட்டுவதற்கு உரிமம் பெற்றேன்.
அதன் பின் சில நாட்கள் மதுரையிலும், படத்தின் கதை களமான மாயவரம் பகுதியிலும் ஆட்டோ ஓட்டினேன். அதிலேயே தினசரி ஆயிரம் ரூபாய் சம்பாதித்தேன். இப்படி ஆட்டோ ஓட்டிய சமயங்களில் பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது.
படத்தில் கதாநாயகிக்கும் வரும் காட்சிகளில் சில காட்சிகள் ஆட்டோவின் பின்னிருக்கையில் அவர் அமர்ந்திருப்பார். அப்போது அவருக்காக ஆட்டோவின் முன்புறம் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதனால் ஃப்ரேமில் நான் இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காக ஆட்டோவின் கீழ்பகுதியில் அமர்ந்தபடியே ஆட்டோவை ஓட்டினேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆளே இல்லாமல் ஒரு ஆட்டோ வருவது போன்று இருக்கும். இதற்காக பயிற்சி பெற்ற ஆட்டோ ஓட்டுநரை அழைக்கலாம் என்று படக்குழுவினர் கூறியதை மறுத்துவிட்டு நானே அந்த வேலையை செய்து முடித்தேன்.
இந்த படத்தின் இயக்குநர் அசோக் தியாகராஜன், அடிப்படையில் ஒரு மருத்துவர். தினசரி 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு வேலையை கொஞ்ச நாள் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு முக்கியமான கருத்தை சொல்வதற்காகவே இந்த படத்தை எடுத்தாக வேண்டுமென வந்திருக்கிறார்.
![Abisaravanan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-mayanathi-abisravanan-script-7204954_29012020150214_2901f_1580290334_331.jpg)
பள்ளி மாணவர்களை, அவர்களுக்கு பள்ளிக் காலத்தில் ஏற்படும் ஒரு இனக்கவர்ச்சி, இனம்புரியாத காதலைப் பற்றி சொல்லும் படம் ‘மாயநதி’. இந்தப் படத்தை நிச்சயம் தேர்வு எழுதும் மாணவர்கள் பார்க்க வேண்டும். அவர்களை அவர்களது பெற்றோர்களே அழைத்து சென்று இந்தப் படத்தை காட்டவேண்டும். அப்படி மாணவர்களை பிரதானப்படுத்தி, மாணவர்களின் சீருடைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படுத்தாத விதமாக இந்த படத்தை அசோக் தியாகராஜன் இயக்கியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் காதல் காட்சிகளே இல்லை என்று கூட சொல்லலாம் என்றார்.