சென்னை: ”ஆரத்தழுவிக் கொள்வதுதான் நமது பண்பாடு. தற்போது கரோனாவால் தொட்டாலே தீட்டு என்ற நிலைக்கு கொண்டுவந்து விட்டனர்” என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனது வீட்டில் வைத்து வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா என்ற பெயரில் பீதியைக் கிளப்பி வருகின்றனர். வெளிநாட்டினர் மூலம் கரோனா பரவுகிறது என்றால், ஆரம்பத்திலேயே அவர்களை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியிருந்தால் பரவியிருக்காதே.
வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றால் ஏழை, எளிய மக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்பு அடைவார்கள். எனவே அதற்கு நஷ்ட ஈடு கொடுங்கள். இதனை மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுக் கொடுக்குமாறு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்.
கையைத் தொட்டாலே கரோனா பரவும் என்றால், எச்சில் தொட்டு எண்ணக்கூடிய ரூபாய் நோட்டுகளை எரித்து விடுவீர்களா? ஆரத்தழுவிக் கொள்வதுதான் நமது பண்பாடு. தொட்டாலே தீட்டு என்ற நிலைக்குத் தற்போது கொண்டுவந்துவிட்டனர்.
ஆதார் கார்டை வைத்து பிரதமர் பதவிக்கு வந்த மோடி, தற்போது சிஏஏவை கொண்டு வந்துள்ளார். அதன் மீது இருக்கும் பாரத்தை திசை திருப்பவே தேவையில்லாத பயத்தை மக்கள் மத்தியில் பரப்புகிறார். எங்களுடைய ஆதாரை வைத்து பதவிக்கு வந்து, எங்களுடைய குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கிய மோடி பதவி விலக வேண்டும்.
சினிமாக்காரர்களுக்கு குரல் கொடுக்க தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ இல்லை. தற்போது சினிமா துறையினருக்கு ஏற்பட்டுள்ள பணி இழப்புக்கு நஷ்ட ஈடு கொடுங்கள்.
படப்பிடிப்பில் இருந்த விஜய்யைக் கழுத்தைப் பிடிக்காத குறையாக வருமானவரித் துறை சோதனைக்காக அழைத்து வந்தது ஜனநாயகமற்ற செயல் மட்டுமல்ல, பழிவாங்கும் செயல். விஜய்க்கு நடந்தது தவறான முன்னுதாரணம். இந்த மண்ணின் விடுதலைக்காக, உரிமைகளுக்காக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: உற்சாக மோடில் வில்லன் மன்சூர் அலிகான்!