என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் களத்தில் சந்திப்போம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள காவ்யா கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், நடிகை மஞ்சிமா மோகன் மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன், வழக்கமாக வரும் காதல் வசனங்கள் இல்லாமல், நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு கொடுத்த இடங்களை அழகாக ஸ்கோர் செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் மஞ்சிமா மோகன்.
இந்நிலையில், "களத்தில் சந்திப்போம்" படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து மஞ்சிமா மோகன் கூறியதாவது, "களத்தில் சந்திப்போம் படத்தின் கதையை கூறியபோதே என் கதாபாத்திரம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பில் அந்த நம்பிக்கை பன்மடங்கு பெருகியது. தற்போது படத்திற்கும், எனது நடிப்பிற்கும் ரசிகர்களிடமிருந்து கிடைத்துவரும் பாராட்டுக்களும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இப்படத்தில் தன்னை நடிக்க தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் RB.சௌத்ரி, ஜீவா, இயக்குநர் என். ராஜசேகர் ஆகியோருக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பால சரவணன் அனைவருக்கும் நன்றி. அதேபோன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ஆகியோருக்கும் வார்த்தையால் சொல்ல முடியாத நன்றியை பகிர்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, நடிகை மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள ரீமேக்கான ஜாம் ஜாம் குயின், விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப் ஐ ஆர், விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது தனுஷின் ராஜ தந்திரம்?