பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்டு நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் பிரபலமானது. இதில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு சாகச இயக்குநர் பியர் கிரிஸ்யுடன் கர்நாடக எல்லையில் உள்ள பண்டிப்பூர் வனப்பகுதிக்குச் சென்றார்.
ஆவணப்படம் எடுக்க மத்திய மாநில வனத் துறை ஐந்து நாள்கள் அனுமதி வழங்கியதாகப் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின், இயக்குநர் பாலச்சந்திரா கூறியுள்ளார்.
மேலும் ஆவணப்படம் தயாரிப்புக் குழுவில் பத்து பேர் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், காடுகளுக்குள் அதிக இரைச்சல் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக வனத் துறையினரின் ஒரு சில வாகனங்களையும், வனக் குழுவினரையும் மட்டுமே பயன்படுத்தி படப்பிடிப்பிற்கான கட்டணத்தை செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி அனுமதியில்லாமல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாகவும், அதிக இரைச்சலுடன் வாகனம் பயன்படுத்தி, புலிகள் காப்பகத்தின் விதியை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் பத்திரிகை, காட்சி ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கர்நாடக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று மாலை ரஜினிகாந்துக்கு, புலிகள் காப்பகத்தில் சிறிய காயம் ஏற்பட்டதால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அருண் விஜய்யின் 'சினம்' மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்