ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகாமுனி’. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாந்த குமார். இவரின் முந்தைய படமான ‘மௌனகுரு’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் ‘மகாமுனி’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மகிமா நம்பியார் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
'மகாமுனி' படத்தில் நடித்த அனுபவம்
'மகாமுனி' படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறுவதற்கு முன் இந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தைதான் சொல்ல வேண்டும்.
ஜர்னலிஸ்ட் மாணவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரியரில் இது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். ஏனென்றால், இதுவரை இதுபோன்ற கதாபாத்திரத்தில் நீங்கள் என்னை பார்த்திருக்க மாட்டீர்கள்.
இது ஒரு சேலஞ்சிங்கான ரோல், இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் சாந்த குமாருக்கு மிகவும் நன்றி. இது ஒரு வாழ்க்கை அனுபவமாக எனக்கு அமைந்திருந்தது. இந்தப் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது.
உங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மை என்ன?
பத்திரிகையாளர் என்றால் பொதுவாக எல்லோருடைய மனநிலையிலும் ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கும். இந்தப் படத்தில் அப்படி இருக்காது. இது மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக இருக்கும். படத்தில் நான் ஒரு ப்ராஜெக்ட் செய்யும் மாணவியாக நடித்துள்ளேன்.
அதுதான் இந்த படத்தின் ஹைலைட், எந்த அளவிற்கு என்னுடைய கதாபாத்திரம் படத்தில் முக்கியம் என்பதை நீங்கள் படம் பார்த்தால்தான் புரியும்.
நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் பற்றி?
நடிகர் ஆர்யா கூட நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவரைப் போன்று ஒரு அர்ப்பணிப்புள்ள ஒரு நடிகரோடு சேர்ந்து நடித்த பிறகுதான், எந்த அளவுக்கு ஒரு நடிகராக ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
சாந்தகுமார் இயக்கத்தில் பணியாற்றியது குறித்து?
மௌனகுரு படத்திற்கு பின் எட்டு ஆண்டுகள் கழித்து அதே இயக்குநர் மீண்டும் ஒரு படம் இயக்கும் போது, அந்தப் படத்தில் மிகவும் தைரியமான ஒரு கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததே மிகப்பெரிய விஷயம்.
ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படிப்பட்டது. நான் நடிப்பதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அவர்தான் கற்றுக் கொடுத்தார்.
படப்பிடிப்புத் தளத்தில் உங்கள் அனுபவங்கள் குறித்து
கஷ்டம் என்று எதுவுமில்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இயக்குநர் அனைத்து வசனங்களையும் கொடுத்துவிடுவார். படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கூலாக பணியாற்றுவார் .
நடிகர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் தனக்கு என்ன தேவையோ அதைக் கூறி வேலை வாங்குவார். அதனால் எந்தவித கட்டுப்பாடோ அல்லது மன அழுத்தமோ நான் உணரவில்லை.
தமிழ் படங்களில் குறைவாக நடிக்கிறீர்கள், இதற்கு காரணம் என்ன?
அப்படி எதுவும் இல்லை. எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் . என்னைப் பொறுத்தவரை குவாண்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம். நடிக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும் ஆடியன்ஸுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும்.
அதுபோன்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நான் நடிக்கிறேன். எந்த மொழியானாலும் எனக்கு பிடித்தமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.
எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?
நான் அதிக அளவில் படங்களில் நடித்து இருந்து. அதன்பிறகு இப்படி ஒரு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்ற வேண்டும்.
ஆனால் நான் இப்பொழுதுதான் இந்தத் துறைக்கு வந்துள்ளேன். இங்கு அதிகமான வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதிகமாக இருக்கின்றன. அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
அடுத்து நீங்கள் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் 'அசுரகுரு' படத்தில் நடித்துள்ளேன். ஜிவி பிரகாஷ் நடிப்பில் 'ஐயங்கரன்' படம். வேற ஒரு படம் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்.