'துருவங்கள் பதினாறு' திரைப்படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் 'மாஃபியா' என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வசூல் செய்துவருகிறுது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் பெரிய மாஃபியா கும்பலை தேடும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாகவும் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நடிகர் அருண் விஜய்க்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகிறது.
இந்நிலையில் அருண் விஜய்யை வைத்து 'தடையறத் தாக்க', 'தடம்' போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி, அருண் விஜய்க்கு தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். குறுஞ்செய்தியாக வந்த இயக்குநரின் வாழ்த்துச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அருண் விஜய், 'எனக்கு பிடித்த இயக்குநரிடமிருந்து இந்தச் செய்தி வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.. என் நாள் இனிதாய் தொடங்கியது.. மிக்க நன்றி சார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் போதைப் பொருள் இருப்பது வருத்தமளிக்கிறது'' - அருண்விஜய்