ராஜரிஷி இயக்கத்தில் காளையன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் 'மதுரை மணிக்குறவர்'. இப்படத்தில் 'தூத்துக்குடி', 'மதுரை சம்பவம்' உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிக்குமார் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மாதவி லதா நடித்துள்ளார். மேலும் ராதாரவி, அனுமோகன், கௌசல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜரிஷி, கருஞ்சிறுத்தைக் கட்சித் தலைவர் துரை, நடிகர் அனுமோகன், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ராஜரிஷி பேசுகையில், "உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இளையராஜாவிற்குப் படத்தின் கதை பிடித்துவிட்டதால் ஒரே நாளில் ஆறு பாடல்களையும் பதிவுசெய்து கொடுத்துவிட்டார்" என்றார்.

நடிகர் அனு மோகன் பேசுகையில், "முன்னோடி நடிகர்களின் ஆசிர்வாதம் இப்படத்திற்கு எப்போதும் உண்டு. இன்றைய படங்களில் சொற்கள் யாருக்கும் புரியாது. இப்படத்தில் இளையராஜாவின் இசை அற்புதமாக உள்ளது. எந்தச் சமுதாயத்தைப் பற்றியும் குறை சொல்லி தமிழ் சினிமாவில் படம் எடுப்பதில்லை" என்றார்.
கவிஞர் முத்துலிங்கம் பேசுகையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு பாடல் எழுதியவர்களை அழைப்பதில்லை. 'லாபம்' படத்தில் பாடல் எழுதியிருந்தேன். ஆனால் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றதே எனக்குத் தெரியாது. சினிமா பாடல்களால் யாரும் அரசியலில் வெற்றிபெற முடியாது என்றார்.
கருஞ்சிறுத்தை கட்சித்தலைவர் துரை பேசுகையில், குறவர் இன மக்களை இழிவுபடுத்தும்விதமாக சில படங்கள் வெளியாகின. இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள்போல் சித்திரிக்கப்படுகின்றனர். இதுமுற்றிலும் தவறானது. இப்படம் அச்சமுதாய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் என்றார்.
இதையும் படிங்க: ஸாரி ஏர்டெல்- இசையமைப்பாளர் ட்வீட்டால் கலகல!