தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவில் நீண்டகால பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'தலைவி' என்ற பெயரில் புதிய படம் தயாராகவுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது.
படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளார்.
'தலைவி' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருகிறது. இதனிடையே படத்துக்காக பரத நாட்டியம் கற்றுவரும் நடிகை கங்கனா, ஜெயலலிதாவின் பழைய படங்களைப் பார்த்து அவரது நடை, உடை, பேச்சு உள்ளிட்டவற்றையும் உன்னிப்பாக கவனித்துவருகிறார்.
இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலா நடிக்கவுள்ளாராம். அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதாவாக கங்கனா நடிக்கவுள்ள நிலையில், எம்ஜிஆர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் மதுபாலா தோன்றலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
முன்னதாக, 1992இல் வெளிவந்த 'ரோஜா' படத்தில் அரவிந்த்சாமி - மதுபாலா ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகினர். ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து இந்த ஜோடி தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளது.