கடந்த புதன்கிழமை இரவு 'இந்தியன் 2’ படப்பிடிப்பு, சென்னை - செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது மின் விளக்குகளை தூக்கிச் செல்லும் ராட்சத கிரேன் கீழே விழுந்து, உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து கமல்ஹாசன் லைகாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இது போன்ற விபத்துகள் படப்பிடிப்புக் குழுவினரின் நம்பிக்கையைக் குலைக்கும். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சையும் பண ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் வழங்கவேண்டும். எந்தொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்கும் ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் நான் உள்பட படப்பிடிப்புக்குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, படப்பிடிப்புக்குத் திரும்ப வழி செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
கமலின் இந்த கடிதத்துக்கு லைகா நிறுவனம் தற்போது பதிலளித்துள்ளது. அதில், ' இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து மிகவும் மோசமானது. அதில் நம்முடன் பணியாற்றிய சில நண்பர்களைத் தவறவிட்டோம். அதன் வேதனை இப்போதும் எங்கள் மனதில் உள்ளது. இந்த விபத்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சில விஷயங்களை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு லைகா சார்பாக உடனடியாக நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல் காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் லைகா ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கொடூரமான விபத்தில் இருந்து நாங்கள் படப்பிடிப்பில் உள்ளவர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளோம். கமல், நீங்கள் உங்கள் கடிதத்தில் கூறியிருந்தது போல் இனி படப்பிடிப்பில் உள்ள அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பும் கட்டாயம் உறுதி செய்யப்படும். அதுமட்டுமல்லாது நடிகர்கள், இயக்குநர் தொழில் நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இனி, படப்பிடிப்பின் போது நீங்களும் இயக்குநர் ஷங்கரும் அங்கிருந்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம். படப்பிடிப்பின் போது நீங்கள் அங்கிருந்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே பணிகள் ஆரம்பிக்கும். மேலும் நாங்கள் தயாரிப்பில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்டவற்றை தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் வழங்க இருக்கிறோம். இதற்கான பணிகளில் எங்களது அலுவலகர்களான செளந்தரராஜன், மணிகண்டன் ஆகியோர் தற்போது செயல்பட்டு வருகின்றனர்' என்று கூறியுள்ளனர்.
இதையும் வாசிங்க: 'நம்முடன் சிரித்துப் பேசிய சிலர் இப்போது இல்லை' - லைகாவுக்கு 'இந்தியன்' கமல் கடிதம்