தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவரான குஷ்பூ 2014ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்தார். இருப்பினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விலகியதில் இருந்தே குஷ்பூவுக்கு காங்கிரஸில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவந்தது.
இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக காங்கிரஸ் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குஷ்பூ தவிர்த்துவந்தார். இந்தச் சூழ்நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளதாக கடந்த சில காலமாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், சிலர் 2 ரூபாய் வாங்கிவிட்டு, தான் பாஜகவில் இணையவுள்ளதாக வதந்தியை பரப்புகிறார்கள் என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளிவைத்தார். தொடர்ந்து, கடந்த வாரம் ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டு பாஜகவை கடுமையாக சாடினார்.
மேலும், பிறப்பால் இஸ்லாமியரான குஷ்பூவின் இயற்பெயர் நகாத் கான். சில மாதங்களுக்கு முன், ட்விட்டரில் குஷ்பூவை இஸ்லாமியர் என்று வலதுசாரிகள் குறிப்பிட்டு விமர்சித்தபோது, தனது ட்விட்டர் பெயரை 'Yes, I'm Nakhat Khan' என்று மாற்றி, விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தவர் குஷ்பூ.
இந்தச் சூழ்நிலையில் குஷ்பூ பாஜகவில் இணைந்துள்ளது பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் பாஜகவில் இணைவது இது முதல்முறை இல்லை. இது இறுதியாகவும் இருக்கபோவதில்லை.
இதுவரை தமிழக பாஜக-வில் இணைந்துள்ள நடிகர், நடிகைகளின் பட்டியல்:
மாநில செயற்குழு உறுப்பினர்கள்: ராதாரவி, மதுவந்தி, கெளதமி, நமீதா, குட்டி பத்மினி, விஜயகுமார், ஜெயலட்சுமி
கலை மற்றும் கலாசார பிரிவு மாநில பிரிவு தலைவர்: காயத்ரி ரகுராம்
கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளர்கள்: தீனா, பேரரசு, பெப்சி சிவா, பாபு கணேஷ், அழகன் தமிழ்மணி
மாநில செயற்குழு அழைப்பாளர்கள்: கங்கை அமரன், கஸ்தூரி ராஜா
மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணை தலைவர்: ஆர்.கே. சுரேஷ்
அடுத்தாண்டு, தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளதால் விரைவில் ஒரு மினி கோடம்பாக்கத்தையே தமிழ்நாடு பாஜகவில் பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதையும் படிங்க: பாஜகவில் குஷ்பூ? சுமுகமாக இருக்குமா பயணம்...