சென்னை: புலவர் புலமைப்பித்தன் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது நினைவலைகள் சிறு தொகுப்பாக இங்கே..
புலமைப்பித்தனின் இயற்பெயர் ராமசாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் பிறந்தார்.1948லிருந்து கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது முதல் கவிதையான ‘எழு ஞாயிறு’, திருக்குறள் முனுசாமி நடத்திய ‘குறள்மலர்’ இதழில் வெளியானது.
இளமைக் காலத்தில் இரவில் வேலை செய்வது, பகலில் பேரூர் தமிழ்க் கல்லூரியில் படிப்பு என்று உழைத்தார். 1961இல் புலவர் பட்டம் பெற்று, திருச்செந்தூருக்கு அருகே உள்ள ஆத்தூரில் தமிழ் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகளில் கலந்து, பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றெடுத்தார்.
கோவை முனிசிபல் உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது, ஒண்டிப்புதூரில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் இவர் வரவேற்புரை வாசித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தன்னைப் பாராட்டிய இயக்குநர் கே.சங்கரிடம், ‘சினிமாவில் பாட்டெழுத வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கேட்டார் புலவர். இயக்குநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்தார். சாந்தோம் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. 125 ரூபாய் சம்பளத்தில், 25 ரூபாய் வாடகையில் வீடுபிடித்துக் குடியேறினார். பெரும்பாலும் சென்னை வீதியெங்கும் நடைபயணம்தான்.
![Life of pulavar Pulamaipithan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-pulamai-pithan-news-script-7205221_08092021134846_0809f_1631089126_858.jpg)
![Life of pulavar Pulamaipithan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-pulamai-pithan-news-script-7205221_08092021134846_0809f_1631089126_310.jpg)
‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் பிறிது மொழிதல் என்கிற இலக்கிய அணி அடிப்படையில் புலவர் எழுதிய ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சக் கிளி…’ பாடல் சிட்டி முதல் பட்டிவரை சிலாகிக்கப்பட்டது.
‘மெளனம் சம்மதம்’ படத்தில் வரும் ‘கல்யாணத் தேன்நிலா காய்ச்சாத பால்நிலா…’ பாடலில் 28 ‘லா’க்களைப் பயன்படுத்தியிருந்தார் புலவர்.
‘அதோ மேக ஊர்வலம்…’ பாடலில் வரும் ‘இரண்டு வாழைத் தண்டின்மேல் ராஜகோபுரம்’ என்கிற வரியைக்கேட்டு, ‘ராஜ கோபுரம் எது புலவரே?’ என்று பலரும் வினவியிருக்கிறார்கள். ‘உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததுதான்’ என்று சொன்னாராம் புலவர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் ‘நிலா அது வானத்து மேலே…’ பாடலை இளையராஜா எழுதினார். மற்ற பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதினார். ஜமுனாராணியும் எம்.எஸ்.ராஜேஸ்வரியும் இணைந்து பாடிய ‘நான் சிரித்தால் தீபாவளி…’ பாடல், பழைய காலத்து இசையமைப்பு பாணியில் உருவாகி ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.
கமல் மற்றும் இளையராஜா குரல்களில் ஒலித்த ‘தென்பாண்டிச் சீமையிலே…’ சோகம் பிழியும் தாலாட்டுப்பாடலாக ரசித்துக் கொண்டாடப்பட்டது.
மனோவும் சித்ராவும் பாடிய ‘நீயொரு காதல் சங்கீதம்…’ மெல்லிசையால் ரசிகர் மனதை வருடியது. வழக்கமாக தனது காதல் பாடல்களில் பெண் அங்கம் குறித்து வார்த்தை விளையாட்டு நடத்தும் புலவர், இந்தப்பாடலில் அப்படி ஒரு வார்த்தைகூட சேர்க்கவில்லை.
டி.எல்.மகாராஜன் -பி.சுசீலா பாடிய ‘அந்திமழை மேகம்…’ பாடல், ஹோலி பண்டிகையின் குறியீடாக கொண்டாடப்படுகிறது.
‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘சொர்க்கத்தின் திறப்பு விழா…’, ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் ‘இந்தப்பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்…’ பாடலை எம்ஜிஆர் உறங்குவதற்கு முன் அடிக்கடி போட்டுக்கேப்பாராம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘சிரித்து வாழ வேண்டும்…’ ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் ‘அழகிய விழிகளில்…’, ‘இது நம்ம ஆளு‘ படத்தில் ‘அம்மாடி இதுதான் காதலா…’, ‘காமதேவன் ஆலயம்…’ ‘நீங்கள் கேட்டவை’யில் ‘ஓ வசந்த ராஜா…’ என புலவர் புலமைப்பித்தனின் வெற்றிப் பாடல்களின் வரிசை நீளமானது.
‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதினார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலவர், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார். இன்று புலவர் மறைந்து விட்டார். ஆனால், அவரது பாடல்கள் காலத்தால் அழியாதது.
இதையும் படிங்க: ’மதிமுகவின் பரப்புரை பணிகளுக்கு உயிரோட்டமான பாடல்கள் எழுதியவர்’ - புலமைப்பித்தனுக்கு வைகோ இரங்கல்