சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இன்று லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இது மிக வருத்தமான தருணம். எது நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தோமோ, அது நடந்திருக்கிறது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை சுஜித் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
கடினமாக உழைத்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி. இந்த விஷயத்தில் சாதி மதம் இனம் எதையும் பார்க்காமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிரார்த்தனை செய்தோம், அனைவரும் ஒன்று சேர்ந்த அந்தத் தருணத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது.
குழந்தைகளுக்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது. ஆனால் விபரீதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்பே இதனை செய்ய வேண்டும். அதிகாலையில் குழந்தை இறந்த செய்தியை முதன்முதலில் ரஜினியிடம் நான்தான் கூறினேன். மிகவும் வருத்தப்பட்டார். குழந்தைகளுக்கு தெரிந்ததெல்லாம் அன்பும் நம்பிக்கையும்தான், அதை நாம் கொடுக்கத் தவறிக்கொண்டேயிருக்கிறோம்.
State body for children அமைப்பைத் தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் கலந்துபேசுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குழந்தைகளின் பாதுகாப்புக்காக வேலை செய்ய வேண்டும்.
இரண்டு வயது குழந்தையின் கடைசி தவிப்பை யாராலும் வார்த்தைகளால் கூற முடியாது. இது தேவையில்லாத ஒரு உயிர் பலி, பெற்றோர் ஆழ்துளைக் கிணறுகளை மட்டும் மூடினால் நம்முடைய பணி முடிந்து விடாது, பாதுகாப்பு முறைகளை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.