சென்னை: அயன், கோ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், இவரது உடல் உறவினர்கள் பார்வைக்கு ஐந்து நிமிடம் மட்டும் வைக்கப்பட்ட பின் தகனம் செய்யப்பட்டது.
செய்தித் துறையில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய இயக்குநர் கேவி ஆனந்த், அதன் பிறகு பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த இவருக்கு, மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான தேன்மாவின் கும்பத்து எனும் மலையாள திரைப்படத்திற்காக தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் சூர்யாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அயன், மாற்றான் உள்ளிட்ட மாறுபட்ட படங்கள் இவர் இயக்கத்தில் வெளியானவை. யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சமூக உணர்வு சார்ந்த படைப்புகளை தமிழ் ரசிகர்களுக்கு அளித்த பெருமை இவரையே சாரும்.
இவர் மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய காப்பான் திரைப்படத்தில் ஆர்யா, சாயிஷா, மோகன்லால் என மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தனர். தொடர்ந்து அடுத்ததாக மல்டி ஸ்டார் திரைப்படம் ஒன்றை இயக்க இருந்தார்.
இச்சூழலில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கே.வி ஆனந்த், அதிகாலை 3:00 மணி அளவில் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. முன்னதாக அவருக்கு கரோனா தொற்றிற்கான பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர் இறந்த பிறகு தான் அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்த கேவி ஆனந்தின் இழப்பை அறிந்த ரசிகர்களும், திரை பிரபலங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க, அவரது உடல் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் பார்வைக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் வைக்கப்பட்டு, உடனடியாக தகனம் செய்யப்பட்டது. கேவி ஆனந்தின் இழப்புக்கு அனைவரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து, அவரின் படைப்புகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.