கரோனா வைரஸ் நிவாரண நிதியாக நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் வழங்கினார். இதுதவிர கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். அதனால் ஏழை மக்கள் பலரும் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்க செல்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் லாரன்ஸ் வீட்டின் முன்பு 20 பேர் கூடி நின்று தங்களுக்கு உதவி வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர்களை சூழ்நிலை காரணமாக சந்திக்க முடியவில்லை என்று கூறி லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என் வீட்டின் முன்பு, நின்றவர்கள் எனக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளனர். அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் ராஜமுந்திரி, விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர்கள். ஊரடங்கு காரணமாக தங்களது ஊருக்குச் செல்ல முடியாமலும், இங்கே உணவு, இருப்பிடம் இல்லாமலும் திணறுகின்றனர். மேலும் நீண்ட நாட்களாக அவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு 15 நாட்களுக்கு உணவு வழங்குவதாகக் கூறியுள்ளேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மண்டபம் கொடுக்க மறுத்தாரா லதா ரஜினிகாந்த்? -மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது விளக்கம்!