ஹைதராபாத்: மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்டும்விதமாகவும், விளையாட்டுத் துறையில் அவர்கள் தாங்கள் அடைய நினைத்த லட்சியத்தைத் தொடரும்விதமாகவும் 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளவுள்ளார் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சைக்கிளில் 100 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. சமீபத்தில் மாலத்தீவுக்கு விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருந்தபோது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது பற்றிய புரிதலை உணர்ந்தேன்.
ஒரு தீவில் உங்களைச் சுற்றி பலர் முகக்கவசம் ஏதும் அணியாமல் இருப்பது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. இதைப் பார்க்கையில் நம்மைப்போல் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் ஏதோ ஒரு காரணத்தால் தங்களது உடல் உறுப்புகளை இழந்து கடினமாக வாழ்ந்துவருவது பற்றி கவலை ஏற்பட்டது.
அவர்களை ஊக்கப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி, 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவுசெய்தேன். ஏனென்றால் கடந்தாண்டு ஏற்பட்ட நெருக்கடி அவர்களுக்காக நிதி திரட்டும் நிறுவனங்களையும் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கியது. எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தச் சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறேன்.
இந்தச் சைக்கிள் பயணத்திற்காக ஐந்து நாள்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொண்டுவருகிறேன். விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக பயண தூரத்தை அதிகரித்து 100 கிலோ மீட்டர் எளிதாகப் பயணம் மேற்கொள்வேன்" என்றார்.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தெலுங்கு, தமிழ், ஆங்கிலஸ மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடல், மறந்தேன் மன்னித்தேன், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பிறந்தநாளன்றே வெளியாகவுள்ள செல்வராகவனின் திரைப்படம்!