சென்னை: தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பெற்றவர் நடிகர் மைக் மோகன். கமல் ஹாசன் - ஷோபா நடித்த கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானார்.
தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம் உள்ளிட்ட இவரது படங்கள் ரசிகர்களிடம் இன்றும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. 1980-களில் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
1999ஆம் ஆண்டு ’அன்புள்ள காதலுக்கு’ என்ற படத்தை இயக்கி நடித்தார். பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன் பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2008இல் வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. பிறகு ’அபயிதோ அம்மாயி’ என்ற தெலுங்குப் படத்தில் நாயகிக்கு அப்பாவாக நடித்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’ஹரா’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை தாதா 87, பவுடர் படங்களை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார். கோவை எஸ்.பி. மோகன் ராஜ், ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.
தற்போது இந்தப் படத்தில் மோகனின் ஜோடியாக குஷ்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தெலுங்கு படம் ஒன்றில் சேர்ந்து நடித்திருந்தனர். ஆனால் தமிழில் சேர்ந்து நடிப்பது இதுதான் முதல்முறை. மார்ச் மாதம் படப்பிடிப்புத் தொடங்க உள்ளது. குஷ்பூ, மோகன் நடிக்கும் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட உள்ளதாக இயக்குநர் விஜய் ஶ்ரீ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரிசை கட்டும் பெரிய படங்கள் - உற்சாகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்!