சினிமா துறையில் 'வசந்த கால பறவை', 'சூரியன்', 'ஜென்டில்மேன்', 'சிந்துநதி-பூ' , 'காதலன்', 'சக்தி', 'காதல் தேசம்', 'ரட்சகன்', 'நிலாவே வா', 'என்றென்றும் காதல்', 'கோடீஸ்வரன்' போன்ற படங்களைத் தயாரித்திருந்தாலும், என்னை நான் ஒரு பட தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொள்வதை விட விநியோகஸ்தர் என்று சொல்லிக் கொள்வதைதான் அதிகம் விரும்புவேன்.
‘ஜென்டில்மேன்’ ஆடியோ கம்பெனி தொடங்கி பல படங்களின் பாடல்களை வெளியிட்டுள்ளேன். ரசிகர்களுக்கு எது பிடிக்கும் ? எது பிடிக்காது ? ஏன் பிடிக்கிறது ? ஏன் பிடிக்காமல் போகிறது? என்பதை ரசிகர்களோடு ரசிகனாக அமர்ந்து பல திரைப்படங்களை பார்த்து தெரிந்து கொண்டவன் நான். அப்பொழுதெல்லாம் ஒரு படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும், அதை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தருக்கும் லாபமா? நஷ்டமா ? என்ற பேச்சுக்கே இடமில்லை, லாபத்தின் அளவு கூடுதலாகவோ, கொஞ்சம் குறைவாகவோ இருக்கும் அவ்வளவுதான்.
அன்று நான் பார்த்த சினிமா துறைக்கும் இன்று நான் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா துறைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். ஒரு படம் ரிலீசானால். அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர், வெளியிட்ட விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள், மீடியேட்டர்கள் எல்லோரும் சம்பாதிக்க வேண்டும், ரசிகர்களால் படம் கொண்டாடப்பட வேண்டும். அந்த அளவுக்கு படம் தரமானதாக இருக்க வேண்டும்.
![kunjumon](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-stateofcinema-ktkunjumon-script-72014954_19042020170029_1904f_1587295829_279.jpeg)
இப்பொழுதெல்லாம் வாரத்திற்கு பல படங்கள் ரிலீசாகிறது, வந்தது தெரியாமல் போய் விடுகிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது. ஆயிரக்கணக்கான டிஜிட்டலில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியிட முடியாமல் இருக்கிறது என்பதும் சங்கடமான உண்மை. எந்த காலத்திலும் ஒரு திரைப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டுமானால், முதலில் அதற்கு தேவை சிறந்த கதை, எப்போதுமே கதைதான் ஹீரோ. கதை, அந்த கதைக்குரிய திரைக்கதை, அதில் இடம்பெறும் செண்டிமெண்ட், காமெடி, சண்டை காட்சிகள், பரவசமூட்டும் பாடல்கள். அர்த்தமுள்ள வசனம், மயக்கும் இசை. அவற்றை நேர்த்தியாக படமாக்கும் இயக்குநர், தலைசிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அனைத்தும் அழகாக அமைய வேண்டும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு தயாரிப்பாளர் கவனம் செலுத்த வேண்டும்.
இயக்குநருடன் இணைந்து பணிபுரிபவர்கள் அனுபவம் நிறைந்த தொழில்நுட்ப கலைஞர்களாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோர் புதியவர்களானால் அவர்கள் பிரபலமானவர்களிடம் உதவியாளர்களாக வேலை செய்த அனுபவமிக்கவர்களாக இருக்க வேண்டும். பிரபல நடிகர்களுக்கு வியாபார கேரண்டி உண்டு என்றாலும் அவர்களது ஊதியத்திற்கும் ஓர் அளவுகோல் வைக்க வேண்டும்.படத்தின் தரமே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இயக்குநர் கதாநாயகன், கதாநாயகி, முதன்மை தொழில் நுட்ப கலைஞர்கள் அவர்களது பலத்தை ஏற்றி கொண்டே போக கூடாது. ஐந்து ரூபாயை ஆறு ரூபாயாக ஆக்கலாம். ஆறு ரூபாயை அறுபது ரூபாயாக ஆக்க கூடாது.
நியாமான ஊதியம் வாங்கினால் நல்லது. ஹீரோ, ஹீரோயின், முதன்மைத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பெரிய சம்பளம் கொடுக்காமல் இருந்தால் படத்தை தரமாக எடுக்க செலவு செய்ய முடியும். முதன்முதலில் படவாய்ப்பு தந்த தயாரிப்பாளர்களுக்கு அவரால் வளர்ந்த இயக்குநரும், ஹீரோவும் குறைந்தது ஐந்து படங்களாவது செய்து கொடுக்க வேண்டும்.
நமக்கு தொழில் சினிமா ’அதை‘ சரியா செய்யணும் ‘சினிமா’வில் இருந்து வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ‘தேவுடு’ என்று ஆந்திர மக்களே கொண்டாடிய என்.டி.ஆர், புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா போன்றவர்களை மக்கள் அரசியலிலும் ஆதரித்தார்கள். முதலமைச்சர்களாக்கி அழகு பார்த்தார்கள். அவர்களைப் பார்த்து இன்று சில பிரபல நடிகர்களும் அரசியலில் நுழைய ஆசைப்பட்டுக் கொண்டு அலைகிறார்கள். இவர்களெல்லாம் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் என்ன நன்மை செய்து இருக்கிறார்கள்?
திடீரென தோன்றிய கரோனா வைரஸ் இன்று உலகத்துக்கே பாடமானது. நாடே முடங்கியது. எல்லா தொழிலும் நின்று போனது, பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது. பிரதமரும், ஜனாதிபதியும், அமைச்சர்களும் தங்களது மாதாந்திர ஊதியத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நடிகர்களும் இயக்குநர்களும் மற்ற டெக்னிஷீயன்களும் இதை கவனத்தில் கொண்டு தங்களது ஊதியத்தை குறைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். சினிமாவும் சுருண்டு கிடக்கிறது. பிறரை குறை கூறுவதோ, குற்றம் சாட்டுவதோ எனது நோக்கமல்ல. சம்மந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டி சுதாரிக்க செய்வதே நோக்கம் என குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.