இந்த உலகமும், மனிதர்களும் அப்படியே புனிதமோ, சுத்தமோ கிடையாது. உலகத்தில் எவ்வளவு அழுக்கு இருக்கிறதோ, அதேபோல்தான் மனிதனுக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. இருட்டுதான் ஆதி, வெளிச்சம் என்பது இடையில் வந்தது. அதேபோல்தான் மனிதனிடத்தில் அழுக்குதான் ஆதி, நிரந்தரமும்கூட. அதுவே யதார்த்தம். அந்த யதார்த்தத்தை எவ்வித அப்பழுக்குமின்றி படமாக்கும் வரிசையில் இவரும் ஒருவர் இல்லை. செல்வராகவனுக்கு பின்தான் அந்த வரிசை ஆரம்பிக்கும்.
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின்போது ஏராளமான வசைகளை வாங்கினார். ஆனால், வசைபாட அதில் ஒன்றுமில்லை. பதின் பருவம் என்ன செய்யும். உலக பொருளாதாரத்தைக் குறித்தா சிந்திக்கும். எதிர்பாலின உடலைத்தான் சிந்திக்கும். இன்று வரை மாதவிடாய் ஏற்படும் பெண்களை தீட்டு என ஒதுக்கும் பிற்போக்குத்தனங்கள் சூழ்ந்த, பாலியல் கல்வியை அங்கீகரிக்காத பெரும்பான்மையான மக்களால் அந்தத் திரைப்படத்தை பலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஒருவனை ஒரு சூழல்தான் வளர்க்கிறது. சொல்லப்போனால் நிஜப்பெற்றோர் அந்த சூழல்தான். சிறு வயதிலிருந்தே துன்பத்தை மட்டுமே சந்தித்து வாழ்ந்தவன், சுற்றிலும் கீறலை மட்டுமே சுமந்து வளர்ந்தவனின் மேல் எப்போதாவது சிறு தூறல் விழுந்தால் அந்தத் தூறலை வாழ்க்கை முழுவதும் தனது குடைக்குள் வைத்துக்கொள்ள மட்டுமே அவன் ஆசைப்படுவான். அப்படிப்பட்ட தூறல்தான் வினோத்திற்கு திவ்யா.
அந்தத் தூறலை பாதுகாப்பதற்கான குடையை கோலிவுட் அதுவரை விரிக்காமல் இருந்தபோது செல்வராகவன் மட்டுமே துணிந்து விரித்தார். காதல் சினிமாக்கள் கற்பனைக் குதிரை மேல், நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள் மேல் பயணித்துக்கொண்டிருந்தபோது செல்வராகவன் வந்து யதார்த்தத்தின் மேல் காதலை அமரவைத்தார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ’காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்' என்று கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு திரை வடிவம் கொடுத்தார்.
இப்படி ஒரு தலைக் காதலை, அந்தக் காதலனுக்குள் உள்ள பாசத்தை, சபலத்தை படமாக்க முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்த சூழலில் 7ஜிக்கு அழைத்துச் சென்று அதைவிட யதார்த்தமான காதலைக் காண்பித்தார். அந்தக் கதிர் தான் யதார்த்த வாழ்வின் காதலன். இன்னும் சொல்லப்போனால் அந்த கதிர்தான் செல்வராகவன் என்று சோனியா அகர்வாலும் கூறியிருக்கிறார். காதலின் அடிப்படை காமம்தான். அதை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இயற்கை இதுவரை உணர்த்திக் கொண்டிருப்பது அதைத்தான். அதனை முழுதாக உணர்ந்தவர் செல்வராகவன்.
வரலாற்று படங்களைப் பொறுத்தவரை, நாம் வாழும் காலத்தில் மன்னன் இருப்பது போன்று செல்வாவுக்கு முன் காண்பித்ததில்லை. ஆயிரத்தில் ஒருவனைப் பொறுத்தவரை மன்னனுக்காக ஒரு தனிக்கதை சொல்லாமல் கதையின் போக்கில் மன்னனை வரவைத்திருப்பார். அதுவரை யாரும் செய்யாத முயற்சி அது. ஆனால், பாகுபலியைக் கொண்டாடும் பலர் ஆயிரத்தில் ஒருவனைக் கொண்டாடுவதில்லை. முக்கியமாக ஏராளமான இயக்குநர்களின் மன்னர்கள் பட்டுத் துணி நாற்காலியில் அமர்ந்துகொண்டு, உடலை மறைக்கும் அளவு தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், செல்வாவின் மன்னன் ஒரு சாமானியன் போல் இருந்தான்.
கதையின் தேவைக்காகத்தான் செல்வராகவன் அப்படி ஒரு மன்னனை வடிவமைத்தார். இல்லையென்றால், தங்க ஆபரண மன்னனைத்தான் அவரும் வடிவமைத்திருப்பார் என்று யாரேனும் கூறினால் நிச்சயம் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். ஏனெனில், செல்வராகவன் எதிலும் அலங்காரத்தைப் பூசாதவர். வாழ்க்கையின் யதார்த்தத்தை இன்னமும் தேடிக்கொண்டே இருப்பவர்.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று இப்போது பலர் பலமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்தவித பேச்சுமின்றி தனது கதாநாயகிகளை இரும்பு மனுஷியாக உருவாக்கி திரையில் நிறுத்தியவர். ஒரு ஆணுக்குப் பின் பெண் இருத்தல் அழகு என்றால், அந்தப் பெண் செல்வாவின் கதாநாயகியாக இருந்தால் பேரழகு.
கோலிவுட்டைப் பொறுத்தவரை நடிகர்களின் பிறந்த நாளுக்குத்தான் அவர்களது படம் வெளியாகி ஆண்டுகள் ஆனாலும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ரசிகர்களும் துள்ளி குதிப்பார்கள். அதேபோல், இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளுக்கும் அவர் இயக்கிய திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள், ஆனாலும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றது.
பிறந்தநாள் மட்டுமின்றி அவர் இயக்கிய திரைப்படம் வெளியாகி, இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற ஹேஷ் டேக்கையும் நெட்டிசன்கள் கொண்டாடிவருகின்றனர். இது கோலிவுட்டில் எந்த இயக்குநருக்கும் கிடைக்காதது. ஆம், கோலிவுட்டின் ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன்.... பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வராகவன்.
இதையும் படிங்க: யாமினிகள் இருக்கிறார்கள்.... மயக்கம் என்ன? நன்றி செல்வராகவன்.... #8YearsofMayakkamEnna