இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் முதன்முதலாக விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் கொலைகாரன். சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரமலான் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்தில், ஆஷிமா நர்வால், நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். முன்னதாக விஜய் ஆண்டனி நடித்த நான்கு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. கொலைகாரன் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதில் விஜய் ஆண்டனி தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களை உச்சு கொட்ட வைத்தது.
ரத்தம் தெறிக்கின்ற அளவிற்கு புத்திசாலித்தனமான கொலைகாரனாக மாறிய விஜய் ஆண்டனியின் மிரட்டலான நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், கொலைகாரன் படக்குழுவினர் 70 மற்றும் 80களில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் போஸ்டர்களை வெளியிட்டு அதில் உள்ள முடிச்சுகள் யார் வில்லன் என்பதுதான் படத்தின் சஸ்பென்சாக இருந்தது. ஆனால், அடுக்கடுக்காக கொலை செய்யும் விஜய் ஆண்டனியை அர்ஜுன் எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்பது கொலைகாரன் படத்தின் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், நூறாவது நாள், பொம்மை, சிகப்பு ரோஜாக்கள் படத்துடன் கொலைகாரனை சம்பந்தப்படுத்த போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இதில், அந்தப் படத்தை ரசித்தவர்கள் நிச்சயம் இப்படத்தையும் ரசிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.