கன்னட திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான படம் 'கேஜிஎஃப்'. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த வரைகலை (Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் தேசிய விருது பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் அடைந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்கிற கதையாக இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் டீஸர் வெளியான சில நாட்களிலேயே அதிகமானோர் பார்த்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, இறுதி கட்ட பணிகளும் நிறைவடைந்து திரை வெளியிட்டிற்கு தயாராக இருக்கிறது.
'கேஜிஎஃப் 2' படத்தினை முதலில் படக்குழுவினர் ஜூலை 16ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இதன் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கேஜிஎஃப் 2' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிதளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் வெளியிட்டு உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க: 'கே.ஜி.எஃப்' பட இயக்குநருடன் கைகோர்த்த ஜூனியர் என்.டி.ஆர்