திருவனந்தபுரம்: அதிதீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மலையாள இயக்குநர் சச்சிதானந்தன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
48 வயதாகும் மலையாள திரைப்பட இயக்குநர் சச்சிதானந்தன் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகாக கடந்த சில நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சிகிச்சை முடிந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது இதைத்தொடர்ந்து திருசூரிலுள்ள மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவரது உயர் பிரிந்தது.
இயக்குநர் சச்சிதானந்தனின் மறைவு கேரள திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.
வழக்குரைஞராகச் செயல்பட்டுவந்த சச்சிதானந்தன், திரைக்கதை ஆசிரியராக சினிமாவில் அறிமுகமானார். சேது என்பவருடன் இணைந்து சாக்லேட், ராபின் ஹூட், மேக்கப் மேன், சீனியர்ஸ், டபுள்ஸ் என ஐந்து படங்களில் திரைக்கதை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்னர் ரன் பேபி ரன், ராமலீலா என சூப்பர் ஹிட் படங்களுக்குத் தனியாக திரைக்கதை எழுதிய இவர் அனார்கலி என்ற படத்தை இயக்கினார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் இவர் இயக்கத்தில் வெளிவந்த கடைசி படமாக உள்ளது.
மலையாளம் மட்டும் அல்லாமல் பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்து இந்தப் படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக்காக உள்ளது.
முன்னதாக, சச்சிதானந்தன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நடிகர்கள் பிருத்விராஜ், பிஜுமேனன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மருத்துவமனைக்குச் சென்று சச்சியின் உடல்நலம் குறித்து, மருத்துவர்களிடம் விசாரித்தனர். அத்துடன் அவருக்குத் தேவையான சிகிச்சை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சச்சிதானந்தனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மருத்துவம் பலனளிக்காமல் உயரிழந்தார்.
இதையும் படிங்க: தமிழ்...தெலுங்கைத் தொடர்ந்து இப்போ இந்தியிலும் ரீமேக் ஆகும் 'அய்யப்பனும் கோஷியும்'