தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர். அவரது 90ஆவது பிறந்தநாளை ஒட்டி, அவரிடம் உதவியாளராக இருந்த மோகன் 'கே.பி.90' எனும் நிகழ்ச்சியை சென்னை சாலிகிராமத்தில் நடத்தினார். இதில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், "இயக்குநர் கே. பாலசந்தருக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்றில் நான்தான் ஹீரோ. என் வாழ்வில் நான் ரசித்த, நெகிழ்ந்த, மகிழ்ந்த ஒரு இயக்குநர் என்றால் அது கே. பாலசந்தர்தான். வளரும் இயக்குநர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும். ஒரு நல்ல இயக்குநருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். கே.பாலசந்தர் இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது" என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, "ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு சமயத்தில் அந்த இசையமைப்பாளரை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் பிரிந்த அந்த இசையமைப்பாளரின் திறமையும், ஆளுமையும் பெரியது. அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசையமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை.
அந்த நிலையில் ஒரு நாள் பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. திலீப் என்ற புது இசையமைப்பாளர். பாலசந்தரின் மூன்று படங்களுக்கு நான்தான் பாடல் எழுதினேன். பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. அந்த திலீப்தான் ஏ.ஆர்.ரஹ்மான். மீண்டும் களம் எனக்கு வந்தது. திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் பாலசந்தர். அவரின் சாதனைகளை ஆவணப்படுத்த வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும்" என்றார்.
விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ். தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குநர் பேரரசு, ரமேஷ் கண்ணா, ஆர்.கே. செல்வமணி, ஆர்.பி உதயகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.