இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஹோட்டல் சவேராவில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் பார்த்திபன் நடிகை சுகாசினி இயக்குநர்கள் சரண், வசந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு பாலச்சந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ராஜேஷ் வைத்யா வீணைக் கச்சேரி நடைபெற்றது. இதன்பின்னர் நடிகர் பார்த்திபன் பேசுகையில், உங்களிடம் கொஞ்சமாவது நாடகம், சினிமா, காதல், கவிதை, நேரம் தவறாமை, கோபம் இருந்தால் உங்களிடத்தில் இன்றும் கே.பாலச்சந்தர் இருக்கிறார். கே பாலச்சந்தரின் இறப்பு என்னுடைய மனதில் இன்றும் 'untreated மெசேஜ்' ஆகவே உள்ளது. அவரைப் பற்றி எப்போது பேசினாலும் எமோஷனலாக ஆகிவிடுவேன்.
அவரது இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிகர் கமலஹாசனுக்கு சிவாஜி எப்படியோ அதேபோன்று எனக்கு கே பாலச்சந்தர். அவரது இரு கோடுகள் படத்தில் ஒரு கோட்டை அழிக்காமல் அந்த கோட்டை சிறிதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக படம் எடுத்தார். பாலச்சந்தரை மறைக்கும் அளவிற்கு அவர் பக்கத்தில் மற்றுமொரு பெரிய இயக்குநர் பெயரையோ பெரியக்கோட்டை போட முடியாது.
இன்னும் நூறு வருடம் ஆனாலும் போட முடியாது நான் வேரை வணங்கும் விழுது என்று உருக்கமாக பேசினார்.