ஆர்.பி. ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டி.எஸ். ராஜ்குமார் இயக்கி இருக்கும் படம் 'அகோரி'. ஆக்ஷன், த்ரில்லர், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கொண்ட இப்படத்தில் அகோரியாக நடிகர் சாயாஜி ஷிண்டே நடித்துள்ளார். சிவனடியாரான அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி, நடிகர் மைம் கோபி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில், கலந்துகொண்ட கஸ்தூரி பேசியதாவது, 'அகோரி படத்தின் இசை, காட்சிகள் ரொம்ப மிரட்டலாக இருந்தது. சென்னையில் கார் ஓட்டி விட்டால் உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் கார் ஓட்டலாம். அதே போன்று தமிழ்நாட்டில் படித்தால் அறிவுசார்ந்த விஷயத்தில் இந்தியாவில் தோற்கடிக்க ஆளில்லை.
தமிழ்நாடு எப்போதும் இந்திய அளவில் உயர்ந்துள்ளது. தமிழர்கள் எப்போதும் கிங்மேக்கர்களாக உள்ளனர். மே 23க்கு பிறகும் கூட தமிழ்நாடுதான் கிங் மேக்கராக இருக்கும். அந்தவகையில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக உள்ளது.
காசியில் நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்கும் நடைபெறும் தாக்குதல் அது. தமிழ்நாட்டை எப்படி பாதிக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. நான் அரசியல் பேசவில்லை அகோரி பற்றி பேசுகிறேன்' என்றார்.