சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான படம், 'கசடதபற'. வெங்கட் பிரபு தயாரித்த இப்படத்தில் பிரேம்ஜி, சந்தீப்கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆறு கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி படமாக வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் 'கசடதபற' படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து படத்தின் இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அன்புள்ள அனைவருக்கும் வணக்கம். தங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு கசடதபற மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அதற்காக இப்படத்தின் இயக்குநராக நான் தங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் . கசடதபற படத்தைப் பார்த்து மகிழ்ந்து என்னையும், எங்கள் குழுவையும் தொடர்ந்து பாராட்டிய உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்
எங்கள் படத்தை மகிழ்வுடன் வெளியிட்டு, மக்களிடம் கொண்டு போய் சேர்த்த சோனிக்கு எனது நன்றிகள். இப்படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் ஒன்றாக இணைந்தது இந்திய சினிமாவிலேயே புதிதான விஷயம்.
இத்தனை பேரின் அன்பினாலும், பெருந்தன்மையினாலும்தான் கசடதபற உருவானது . தாங்கள் அளித்த இந்த வெற்றி என்னை தொடர்ந்து உற்சாகத்தோடும் , பொறுப்புணர்வோடும் பயணிக்க வைக்கும். அனைவருக்கும் மீண்டும் எனது மகிழ்வான நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.