இயக்குநர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டார் படமான 'கசட தபற', ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது.
'கசட தபற' படத்தை பிளாக் டிக்கட் கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.
இந்த படம் குறித்து சிம்பு தேவன் கூறியதாவது, திறமைமிக்க நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது தனிப்பட்ட அனுபவமாக இருந்தது.
ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி, பிரியா பவானி சங்கர் என ஒவ்வொருவருமே நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர்கள்.
யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் போன்ற கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களுடன் ஜிப்ரான், சாம் சிஎஸ் போன்ற தற்போதைய பரபரப்பான இசையமைப்பாளர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். இது கசட தபற குழுவுக்கு ஒரு மிகப்பெரிய வரம்.
திரைப்படமானது 'ஆந்தாலஜி' வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆந்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. விரைவில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும். ஜுலையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்று தெரிவித்தார்.