சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி (26) மதன் (30) என்பவரால் இன்று பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பை வழங்கும் வகையில் பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ் நாடு உயர் நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், உள்ளிட்ட சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA-) வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பயிற்சி ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மருத்துவர்களுக்கு உள்ளதை போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். சமீப காலமாக இதேபோன்று பல இடங்களில் நடைபெற்று வருகிறது, இனிமேலும் இது போன்ற கொடூரத்தை அனுமதிக்க முடியாது. பள்ளி மாணவர்களுக்கு முன்பாக இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றிய அரக்கனை தமிழக அரசும், காவல்துறையும் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளது.
உயர் நிலை -மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
அதேபோல, தமிழ் நாடு உயர் நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், '' ஆசிரியை ரமணியை பட்டப் பகலில் மாணவர்கள் முன்னிலையிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்த அந்த நபருக்கு விரைவில் தூக்குத்தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வேண்டுகிறோம். அவ்வாசிரியரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் பத்து லட்சம் வழங்கும் அறிவிப்பை முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டுகிறோம். மேலும், தமிழக அரசு உடனடியாக ஆசியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுகிறோம்'' என தெரிவித்துள்ளது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இச்சம்பவத்தால் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், மிகப்பெரிய அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணமாக இருந்தாலும் பள்ளிக்குள் சென்று ஒரு ஆசிரியரை எளிதாகக் கொலை செய்துவிட முடியும் என்ற எண்ணம் கொடூரக் குற்றவாளிக்குத் தோன்றியுள்ளது என்பதே பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்பதை வெளிப்படையாக உணர்த்துவதாக உள்ளது.
இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே பள்ளிகளில் நடந்துள்ள சூழலில் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும் இதுவரை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது வேதனை தரும் நிகழ்வாகும். எனவே உடனடியாக ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தைக் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். இனிமேலும் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் அதற்காக கடுமையான போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்'' என தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்