த.செ.ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Actor Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 2ஆம் தேதி வெளியானது.
அதிகாரத்தை எதிர்த்து சட்டப்போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்னை குறித்தும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர், திரையுலகினர் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் படத்தில் இருப்பதாகக் கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ரூ.5 கோடி இழப்பீடு கேட்ட வன்னியர் சங்கம்
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழுவினர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்தவகையில் கருணாஸ் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரம்பத்தனத்தின் உச்சம்
அதில், 'படத்தில் சில காட்சிகளை நீக்க பாமகவினர் குரல் கொடுத்தனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார். பிரச்னை முடிந்தது.
ஆனால் மீண்டும், மீண்டும் பாமகவினர் வம்படி செய்வதும் திரைப்பட சுவரொட்டியைக் கிழிப்பதும், திரையரங்குகளில் படம் ஓடவிடாமல் தடுப்பதும் அரம்பத்தனத்தின் உச்சம். தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.
நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து விமர்சித்துவருவதும், சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்டச் செயலாளர் அறிவிப்பதெல்லாம், என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை. ஏதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சரிக்கினால், அடுத்து உடனே ஏதாவது செய்து பரபரப்பாக வேண்டும் என்ற அரசியல் நோக்கில், இப்போது பாமக 'ஜெய்பீம்' திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது.
அரசியல், சாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா தமிழ்ச்சமூகத்திற்கு பங்காற்றுகிறார். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் படி செய்து பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.
தமிழ்ச் சமூகத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் முன் வந்து நிற்கிறார். 'ஜெய்பீம்' திரைப்படத்தோடு அவர் நின்றுவிடவில்லை அதற்கும் மேலாக அந்தப் படத்தில் வாழ்ந்த இருளர் சமூக மேம்பாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி தருகிறார். ஆகையால், சூர்யாவை எதிர்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.