சினிமா உலகில் போதைப்பொருள்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இரத்தப் பரிசோதனை நடத்தினால் அதிகமாக டாப் ஹீரோக்கள்தான் சிக்குவார்கள் என்று கூறியிருந்தார்.
தற்போது கன்னட திரையுலகிலும் பலருக்கும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சீரியல் நடிகை அனிகா
கடந்த 29ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில் கன்னட சீரியல் நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த அனூப் (39), ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.
நடிகர், நடிகைகளிடம் விற்பனை
அனிகாவிற்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும், திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளில் கலந்து கொண்டு போதை மாத்திரைகளை விற்று வந்ததாகவும் தெரியவந்தது. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ்
திரைப்பட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் நடிகர், நடிகைகள் போதை மருந்து உட்கொள்வதாக பரபரப்பான குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நடிகை அனிகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அனைத்து நடிகர் நடிகைகளின் விவரங்களை விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை வளையத்தில் பிரபல நடிகை
சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் துறையின் விசாரணையின் ஒரு பகுதியாக பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு காவல் துறை போதைப்பொருள் தொடர்பாக நடிகர்களின் ஈடுபாடு தொடர்பான விசாரணையை அதிகரித்துள்ளது.
நடிகை ராகினி திவேதி மற்றும் அவரது உதவியாளர் நடிகர்கள் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊடகங்கள் ரியாவை தவறாக சித்தரிக்கின்றன - ஷிபானி தண்டேகர்