கன்னடத் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளவர் ராஜன். இவர், தனது தம்பியுடன் இணைந்து பல படங்களுக்கும் இசையமைத்து வந்தார். தனது சகோதரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனியாக இசையமைக்கத் தொடங்கினார்.
கன்னடா தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கிட்டத்தட்ட 375 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்.11) இரவு தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக ராஜன் உயிரிழந்தார். இச்செய்தியை அவரது மகன் ஆனந்த் குமார் உறுதி செய்துள்ளார்.
ராஜனின் இறுதிச்சடங்கு அமெரிக்காவில் உள்ள அவரது மகள் வந்தபிறகு இன்று (அக்.12) பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ராஜனின் மறைவு திரைத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே மகன்