பாலிவுட் குயினாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'தலைவி' படத்தில் நடித்துவருகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறன. இந்தப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துவருகிறார். பிரியாமணி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தை அலங்கரிக்கும் கங்கனா அதற்காகப் பல மாதங்களாகத் தன்னை தயார்ப்படுத்திவந்தார். ஜெயலலிதாவின் உடல்மொழி, நடனம் உள்ளிட்ட பலவற்றை கற்று தற்போது படப்பிடிப்பில் அசத்தி வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இதனிடையே கங்கனாவின் 'தலைவி' பட தோற்றம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுவரும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல், சில நாள்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடி அசத்திய கங்கனாவின் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அந்தப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தற்போது படத்தின் சில முக்கிய பாகங்கள் புதுச்சேரியில் படமாக்கபட்டுவரும் நிலையில், சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கடற்கரைக்குச் சென்ற கங்கனா அங்கு கடலின் இயற்கை அழகை ரசித்து நிற்கிறார். கடல் அலையையும், மதி மயக்கும் செஞ்சிவப்பு சூரியனின் எழில்கொஞ்சும் அழகையும் ரசித்து மகிழ்ந்தார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'தலைவி' படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.