சர்வதேச யோகா நாள் நேற்று (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், அதைச் செய்ததால் தங்களுக்குள் உண்டான மாற்றம் குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
அந்தவகையில் பாலிவுட் நடிகை கங்கனா தனது சகோதரி ரங்கோலி சாண்டல் மீது ஒருவர் திராவகம் ஊற்றியதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து, எப்படி யோகா மூலம் மீண்டுவந்தார் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரங்கோலி மீது திராவகம் வீசியதில் அவரின் முகத்தின் பாதி எரிந்ததில் ஒரு கண் பார்வை இழந்துவிட்டார். மார்பகம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனால் மிகுந்த மனவலியில் இருந்தார்.
கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் அவர் 53 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. இதனாலேயே அவர் அதிகம் பேசுவதை நிறுத்திவிட்டார். என்ன நடந்தாலும் ஒரு வார்த்தைகூட சொல்ல மாட்டார்.
அவருக்கு விமானப்படை அலுவலருடன் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. ஆனால் அவர் ரங்கோலியின் திராவகத் தாக்குதலுக்குப் பிறகு விட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அவர் கண்ணீர் சிந்தவில்லை, ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிறகு என்னுடைய யோகா ஆசிரியர் சூர்ய நாராயணனிடம் யோகா பயிற்சி எடுத்துக் கொண்டார். அப்போது வரை தீக்காயங்கள், உளவியல் ரீதியான நோயாளிகளுக்கு யோகா உதவும் என்பது எனக்குத் தெரியாது.
அவள் என்னுடன் பேச வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். அதனால் அவளை, நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றேன். மெள்ளமெள்ள அவரிடம் நிறைய மாற்றத்தை உணர்ந்தேன். அவர் இழந்த பார்வை கிடைத்தது. யோகா என்பது உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கொடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இந்தப் பழக்கத்தை விட்டு ஒரு வருடம் ஆயிடுச்சு' - சிம்பு