படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என லைகா நிறுவனத்திற்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு 'இந்தியன் 2’ படப்பிடிப்பு, சென்னை - செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது மின் விளக்குகளை தூக்கிச் செல்லும் ராட்சத கிரேன் கீழே விழுந்து, உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து நசரத் பேட்டை காவல் துறையினர் லைகா நிறுவனம், கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.
தற்போது இந்த விபத்து குறித்து கமல்ஹாசன் லைகாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 'மிகுந்த மனவேதனையுடன் இதை நான் எழுதுகிறேன். பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற சம்பவங்களை இன்னும் மறக்கமுடியவில்லை. நம்முடன் சிரித்துப் பேசி பணியாற்றிய சிலர் இப்போது இல்லை.
விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் நான் தள்ளியிருந்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன். என்னுடைய வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இது போன்ற விபத்துகள் படப்பிடிப்புக் குழுவினரின் நம்பிக்கையைக் குலைக்கும். என்ன விபத்து ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு முழுமையாகவும் உடனடியாகவும் வழங்கப்பட வேண்டும்.
காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருந்துவ சிகிச்சையும் பணரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் வழங்கவேண்டும். எந்தொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்கும் ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் நான் உள்பட படப்பிடிப்புக்குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, படப்பிடிப்புக்குத் திரும்ப வழி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க: இனி இப்படியொரு இழப்பு வேண்டாம் - 'இந்தியன் 2' பட விபத்து குறித்து சிம்பு உருக்கம்!