மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசனின் வீட்டில் நேற்றிரவு கரோனா பெருந்தொற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீஸை ஒட்டியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, கமல் ஹாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
அதில், “உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வந்த செய்திகள் உண்மையல்ல, வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் இரண்டு வாரங்களாகத் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன்.
அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்கிறேன், செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிடவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் கமல் ஹாசன், அவரது குடும்பத்தினர் கரோனா பெருந்தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்னுடன் யாரும் இல்லை, கிளாரா என்ற பூனையை தவிர’ என தெரிவித்தார்.
இதே போன்று, நடிகை ஸ்ருதியின் தாயார் சரிகா மும்பையிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல் ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஊர்ஜிதமான தகவல்கள் ஏதும் அறியாமல். முறையாக அறிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 'கரோனா வைரஸை எதிர்த்து நாம் போராட வேண்டும்' -ரம்யா பாண்டியன்